இலங்கை தமிழரசு கட்சியில் இவர்கள் யாருக்கும் ஆசனம் கொடுக்க வேண்டாம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் நியமனம் தொடர்பாக தமிழரசுகட்சி தலைமைகளுடன் தனித்தனியாக கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்ததாக சிரேஷ்ட ஊடகவியலாளர் களுவாஞ்சிகுடியை சேர்ந்த சாமித்தம்பி ரவீந்திரன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று (01) தமது தொலைபேசி மூலமாக தமிழ்தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்தேசிநகூட்டமைப்புபேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா, பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம், இலங்கை தமிழரசு கட்சி சிரேஷ்டதலைவர்களான பொ.செல்வராசா, சீ.வி.கே.சிவஞானம்,

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஷ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சிதலைவருமான பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் மண்முனை தென் எருவில் பிரதேச தமிழரசு கட்சி தலைவர் மா.நடராசா ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசி மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் தேர்தலில் பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும்,

அதற்கு தமிழரசு கட்சி மூலம் மட்டக்களப்பில் நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்கள்தெரிவை பொறுத்தே அமையும் எனவும், வேட்பாளர்கள் கடந்த காலத்தில் உறுதியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக செயல்பட்டவர்களாகவும் உறுதியானவர்களாக வைம் சோரம் போகாதவர்களாகவும் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியதாக தெரிவித்துள்ளார்.



கடந்த 2012, மகாணசபைதேர்தல், 2015, பொதுத்தேர்தல்களில் பேரினவாத கட்சிகளில் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர்கள், அரசாங்க கட்சி அமைப்பாளர் பதவிகளை வகித்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களாக யாரும் நிறுத்தப்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு ஆசனங்கள் மட்டுமே பெறக்கூடிய வாய்ப்புள்ளதாக கடந்த கால மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் புள்ளி விபரங்களை சுட்டிக்காட்டியதாவும் அவர் தெரிவித்தார்.

இந்த கருத்துக்களை அவதானமாக செவிமடுத்த சம்பந்தன், மாவைசேனாதிராசா, சுமந்திரன், துரைராசசிங்கம், சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் இதுவரை மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தெரிவு முற்றுப்பெறவில்லை.

பலவிண்ணப்பங்கள் மட்டக்களப்பில் இருந்து தமக்கு கிடைத்துள்ளதாகவும் விரைவில் மட்டக்களப்பில் உள்ள தமிழரசு கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்பே வேட்பாளர் விபரங்களை வெளியிட முடியும் எனவும் தாம் கூறிய ஆலோசனைகளை கவனத்தில் எடுப்பதாகவும் அவர்கள் உறுதியளித்ததாக சிரேஷ்ட ஊடகவியலாளர் ரவீந்திரன் மேலும் கூறினார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் ரெலோ சார்பாக இருவரும், புளட் சார்பாக ஒருவரும் ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிலையில் தமிழரசு கட்சி சார்பாக ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இவர்களில் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக செயல்பட்ட சீ.யோகேஷ்வரன், ஞா.ஶ்ரீநேசன் ஆகிய இருவருடன் இன்னும் மூன்று வேட்பாளர்கள் நியமிக்கப்படவுள்ள நிலையில் 13, விண்ணப்பங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக தமிழரசு கட்சி பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post